இரும்புக் குதிரையும், உருள் சிறுந்தேரும்

இரும்புக் குதிரை (இரு சக்கர வாகனம் – motor bike)

சிறு வயது முதலே எனக்கு இரு சக்கர (எந்திர / motor) வண்டிகள் மீது பெரிய ஆர்வம் இல்லை. சிறுவர் இதழ்களில் அப்போது வந்த இயற்கை பாதிப்பு குறித்த பதிவுகளாக இருக்கலாம். என்னால் இயன்ற வரை தவிர்க்கலாம் என்று எண்ணியிருந்தேன்.

என் செய? இரு சக்கர வண்டி என்பது ஆடம்பரத்தில் இருந்து அடிப்படைக்கு மாறி வருடங்கள் பல ஆகி விட்டது. எனவே, விருப்பம் இல்லாவிடினும் அதைக் கற்றே ஆக வேண்டிய சூழல்.

அதுவும் திருமணம் ஆவதற்கு முன்பு வரை வண்டி ஓட்ட முற்றும் தெரியாதிருந்தது. அதற்கும் கொஞ்சம் முன்னரே வண்டி ஓட்டக் கற்கத் தொடங்கிப் பின்னர் மெல்ல முன்னேறினேன்.

வண்டி ஏற்றம் 😉 பழகிய பின்னர் அது என் உடலின் ஒரு பகுதியாய் மாறுவதை உணர்ந்தேன். கிளச், கியர், ஆக்சிலரேட்டர் என வண்டியின் ஒவ்வொரு நகர்வுடன் என் உடலும் உள்ளமும் நகர்வதை உணர்ந்தேன். அது ஒரு அழகிய உணர்வு.

அதன் (வண்டி ஓட்டுவதன்) மீச்சிறு நுணுக்கங்களை நானே மெல்லக் கற்றுக் கொண்டேன் யாரும் சொல்லித் தராமலே. அது இன்னும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

கண்ணாடியில் இருபக்கமும் பார்த்தல், வண்டிகள் வரும் போது இலாவகமாகத் திருப்புதல் என அந்தக் கல்வி மெல்ல மெல்ல உயர்ந்தது. பிரேக்கைத் தக்க அளவு பயன்படுத்தி வண்டியின் வேகத்தைக் குறைத்தல் / நிறுத்துதல் என அது ஒரு அழகியல் சார்ந்த நுண் உணர்வு / மகிழ்ச்சி.

அடுத்த கட்டம் “உருள் சிறுந்தேர்” (மகிழுந்து – car).

உருள் சிறுந்தேர் (மகிழுந்து):

பெரிய வண்டிகள் மீதான அச்சம் சிறுவயது முதலே உண்டு. இருசக்கர வண்டிகளில் அது நம் உடலோடு ஒரு பகுதியாய் ஆகிறது எனவே அதனைக் கட்டுப்படுத்த / முன்னோக்கிப் பார்க்க (எனக்கு) எளிதாக இருக்கிறது. ஆனால், மகிழுந்தில் அவ்வாறு அமைவதில்லை. அது நம்மைக்காட்டிலும் இரு மடங்கு பெரிதாய் உள்ள வாகனம்.

மகிழுந்து சில ஆண்டுகளுக்கு முன்வரை (2000-க்கு முன்) ஒரு ஆடம்பரமாகத் தான் இருந்தது. ஆனால், இன்று அது அடிப்படையாய் மாறி நம் முன் நிற்கிறது. அதை ஓட்ட அறியாதவர் இழிவாகப் பார்க்கபடுவதும் சில இடங்களில் நடக்கிறது. எனினும் குடும்பத்துடன் இனிதாய்ப் பொழுதைக் கழிக்க வெளியே செல்ல என, மகிழுந்து உதவுவதை நாம் மறுக்க முடியாது. எனவே, அதைக் கற்க வேண்டிய தேவை எனக்கும் ஏற்பட்டது.

என்னைப் பொறுத்த வரை அதனை இயக்க ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளைச் செய்ய வேண்டும் :

1. இரு புறமும் கண்ணாடியில் கவனமாய் நோக்க வேண்டும்.
2. மேடு பள்ளங்கள் குறித்து விழிப்போடு இருக்க வேண்டும்.
3. கண்களாலேயே அளவிட்டு முன்னமே குறிப்பிட்ட இடைவெளி விட்டு ஓட்ட வேண்டும்.
4. வேகம் சீராக இருக்கணும். மெல்லமாகவும் நகர முடியாது, பின் வரும் வாகனங்களுக்குத் தொந்தரவு ஆகும்.

என இவ்வாறு மகிழுந்தைக் கற்பதில் எனக்குப் பலச் சிக்கல்கள். அதைக் கற்றுத் தருபவர்களும் ஓட்டுநர் பள்ளி ஆசிரியர்கள் பொறுமை இல்லாதவர்களாய் இருப்பது என்னுடைய கெட்ட நேரம் தான் 😦

“Gear மாற்றம்” எனும் சிறு தடங்கலைத் தவிர மற்றவற்றை ஓரளவிற்கு கற்றுள்ளேன்.

ஒருவழியாக மகிழுந்தைச் சரியாகப் பயில்வேன் என நம்புகிறேன் 🙂

Leave a comment